ரஷியாவின் ஏவுகணை மழையால் குலுங்கியது, உக்ரைன்; 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்

உக்ரைன் மீது ரஷியா போர்

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷியா ஆக்கிரமித்து வசப்படுத்தியது. தொடர்ந்து கிழக்கு உக்ரைனையும் தன் வசப்படுத்த விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, நார்வே உள்ளிட்ட நாடுகளால் நிறுவப்பட்ட நேட்டோ அமைப்பில் சேர்த்து உக்ரைன் பாதுகாப்பு தேட முயன்றது. இது ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாடு மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போர் தொடுத்தது. வல்லரசு நாட்டுக்கு எதிராக ஒரு குட்டி நாடு என்ன செய்து விட முடியும், ஓரிரு நாளிலேயே தவிடுபொடியாகி விடும், போர் முடிவுக்கு வந்து விடும் என உலகமே எதிர்பார்த்தது. ஆனால் அது நிறைவேறவில்லை.

10 மாதங்கள் கடந்தது….

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு தோள் கொடுக்க, ரஷியாவுக்கு எதிரான போர், 10 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

உக்ரைனின் படைத்தளங்கள், கட்டமைப்புகள் மீது முதலில் தாக்குதலைத் தொடங்கிய ரஷியா அடுத்து அடுக்குமாடி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், தியேட்டர்கள் என தாக்குதலை விரிவுபடுத்தியது. ஆனாலும் உக்ரைன் தொடர்ந்து தாக்குப்பிடித்து வருவதோடு மட்டுமின்றி ஒரு போதும் சரண் அடைய மாட்டோம் என்று சபதம் செய்துள்ளது.

உக்ரைன் மீது சமீப காலமாக ரஷியா ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாடு கடும் மின்தடைகளால் அல்லலுற்று வருகிறது. லிவிவ் நகரின் 90 சதவீத பகுதிகள் இருளில் தத்தளிப்பதாக அதன் மேயர் தெரிவித்தார்.

120 ஏவுகணைகள் வீச்சு

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைகளை மழையாக பொழிந்தது. இதனால் உக்ரைனிய நகரங்கள் குலுங்கின.

இதுபற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோல்யாக் கூறும்போது, ” உக்ரைன் மக்கள் மீதும், உள்கட்டமைப்புகள் மீதும் குறி வைத்து 120 ஏவுகணைகளை ரஷியா வீசியது. தலைநகர் கீவில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி படுகாயம் அடைந்த 14 வயது சிறுமி உள்பட 3 பேர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்” என தெரிவித்தார்.

கார்கிவ், ஒடேசா, லிவிவ், ஜைட்டோமிர் நகரங்களிலும் ஏவுகணைகள் விழுந்தன.

வான் மற்றும் கடல் வழிதாக்குதல்

ஒடேசா பிராந்திய தலைவர் மாக்சிம் மார்செங்கோ, “மிக பயங்கரமான ஏவுகணை தாக்குதல் உக்ரைன் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது; ஒடேசா பிராந்தியத்தில் 21 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதன் சிதைவுகள், குடியிருப்புகள் மீது விழுந்தன. இருப்பினும் பலி ஏதும் இல்லை” என தெரிவித்தார்.

உக்ரைன் விமான படை கூறும்போது, ” வான் மற்றும் கடலில் இருந்து ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. காமிகாஸே டிரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தது.

கீவ் நகரில் ரஷிய ஏவுகணைகளை இடைமறித்த ஏவுகணை சிதைவுகள் விழுந்து 2 வீடுகள் பாதிப்புக்குள்ளானதாகவும் தெரிய வந்துள்ளது. மைக்கோலேவ் கவர்னர் விட்டாலி கிம், 5 ஏவுகணைகள், உக்ரைன் வான்பாதுகாப்பு தளவாடங்களால் வழிமறிக்கப்பட்டன என தெரிவித்தார்.

காலை முதல் நாட்டில் எல்லா பிராந்தியங்களிலும் வான்தாக்குதல் சைரன்கள் ஒலித்ததாக உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் வெடிகுண்டு தவிர்ப்பு மையங்களை நாடுமாறு அதிபர் ஆலோசகர் ஒலக்சிய் ஆர்ஸ்டவிச் கேட்டுக்கொண்டார். மேலும், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.