வீடியோவில் சிக்கிய திமுக… சண்டைக்கு வந்த அதிமுக… கோவை மாநகராட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலக வளாகத்தின் விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அவருடன் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து மன்ற உறுப்பினர்கள் பலரும் வந்திருந்தனர். கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

கோவை மாநகராட்சி கூட்டம்

இதையொட்டி மாமன்ற கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. இந்த சூழலில் விக்டோரியா ஹாலின் முன்புறம் அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, வெள்ளலூர் குப்பை கிடங்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கவுன்சிலர்கள் முறைகேடு

அப்போது முறைகேட்டில் திமுக கவுன்சிலர்களும் உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர். இதையடுத்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் முறைகேடு தொடர்பாக அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

பதிலடி கொடுத்த கவுன்சிலர்

அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்வாதத்தை முன்வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலரும், மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு பேசுகையில், இது திமுக ஆட்சி. நீங்கள் உத்தரவிட வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு சர்ச்சை

பின்னர் செய்தியாளர்களை பேசிய அதிமுக கவுன்சிலர்கள், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு செய்த போது திமுக துணை மேயர், திமுக கவுன்சிலர்கள் கார்த்திகேயன், அஸ்லம் பாஷா ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததை வீடியோ பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் மேயர் கல்பனா பரப்பினார்.

இதுவரை நடவடிக்கை இல்லை

இந்த சம்பவம் நடந்து 20 நாட்களை கடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் மேயர் உடன்படிக்கையில் ஈடுபட்டு விட்டதாக தெரிகிறது. கோவை மாநகராட்சிக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்களுக்கு இடையில் யார் அதிகமாக சம்பாதிப்பது என்ற போட்டி நிலவுகிறது.

மக்களை பற்றிய அக்கறை இல்லை என்று குற்றம்சாட்டினார். இதற்கிடையில் கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாய் வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பணியாளர்கள் நலன் கருதி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கூலியை உயர்த்தி 648 ரூபாயாக வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.