புதுச்சேரி: புதுச்சேரியில் 500 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில் 1,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், முறையான ஊதியம் வழங்க வேண்டும், நேரடி பணப்பரிமாற்ற முறையை ரத்து செய்ய வேண்டும், ரேஷன் கடைகளை தொடர்ந்து இயக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாரதிய புதுச்சேரி நியாயவிலைக்கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சுதேசி பஞ்சாலை அருகில் நடைபெற்றது. சங்க தலைவர் முருகானந்தம், பொதுச் செயலாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். 50க்கும் மேற்பட்ட ரேஷன்கடை ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா, நேரு எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று ஆதரவு தந்து பேசினர்.
இதைத்தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் மறைமலை அடிகள் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலை, புதுச்சேரி-விழுப்புரம் சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது பற்றி தகவல் அறிந்தவுடன் புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் எஸ்பி தீபிகா, கிழக்கு பகுதி எஸ்பி சுவாதி சிங் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் ஊழியர்கள் மறியலை கைவிட மறுத்தனர். மறியல் நீண்ட நேரம் நடந்ததால் பொறுமை இழந்த வாகன ஓட்டிகள், மறியலில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதேபோல் மறியலை கைவிடகோரி பேச்சுவார்த்தை நடத்திய போலீஸாருடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது போலீஸார், போராட்டகாரர்கள் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தடியை கொண்டு தள்ளினர். ஆனால் அவர்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தியதோடு, 65 பேரை கைது செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து அப்பகுதியில் சீரானது.