திருச்சி: ‘முதல்வர் அளித்த ஊக்கத்தால், மகளிர் குழுக்கள் வெற்றி பெறுகின்றன’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் விதைத்த விதை தான் பல லட்சம் மகளிர் பயனடையும் சுயஉதவிக்குழுக்கள் இயக்கம். அதன்பின் 1996ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபோது, மகளிர் சுயஉதவிக்குழு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு மகளிர் குழுக்கள் அனைத்து கிராமங்களிலும் உள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம, நகர்புறங்களில் 4 லட்சம் குழுக்கள் உள்ளன. 2022ல் 16 ஆயிரம் புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மகளிர் திட்டத்துக்கு தனி அலுவலகம் திறந்து வைத்து அக்கட்டிடத்துக்கு அன்னை தெரசா மகளிர் வளாகம் என்று பெயர் சூட்டி கலைஞர் மகிழ்ந்தார். முத்தமிழறிஞர் கலைஞர், இத்திட்டத்தை கொண்டு வந்தார் என்றால், அவரது வழியில் வந்த நமது முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வராக இருந்தபோது சுய உதவிக்குழுக்கள் மேம்பாட்டுக்காக 100 மணி நேரத்துக்கு மேலாக நின்று கொண்டே தனது கரங்களால் பல்லாயிரக்கணக்கான மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கினார்.
2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் 16 லட்சம் மகளிர் பயனடையும் வகையில் ₹2,800 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்தார். முதல்வர் அளித்த ஊக்கத்தால், மகளிர் குழுக்கள் வெற்றி பெறுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.