புத்தாண்டுக் கொண்டாட்டம்: புதுச்சேரி முழுவதும் 1,500 போலீஸார் பாதுகாப்பு

புதுச்சேரி: புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 25,000 பேர் கடற்கரையில் கூட வாய்ப்புள்ள நிலையில், அன்றைய தின பாதுகாப்பில் புதுச்சேரி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என போக்குவரத்து சினீயர் எஸ்.பி நாரா சைதன்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சனிக்கிழமை பகலில் இருந்தே கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்குவர். நகரில் 4 ஆயிரம் தங்கும் விடுதி அறைகள் உள்ளன. அதன்படி வெளியூர், வெளி நாட்டவர், உள்ளூர் மக்களையும் சேர்த்து 25 ஆயிரம் பேர் வரை நகருக்குள் வர வாய்ப்புள்ளது.

கடற்கரை பகுதியில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சனிக்கிழமை பிற்கபல் முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அப்பகுதியில் வசிப்போருக்கும், தேவாலயங்களுக்கு வருவோருக்கும் சிவப்பு, மஞ்சள், ஊதா நிற அனுமதி அட்டை நாளை வழங்கப்படுகிறது. அதனை தேவையானவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

புத்தாண்டுக்கு வருவோர் தங்களது வாகனங்களை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம், புதிய துறைமுக வளாகம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து செல்ல பிஆர்டிசி மினி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது.

கடற்கரைக்கு வருவோர் முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகிய கரோனா பரவல் தடுப்பு விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சனிக்கிழமை பகல் முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையில் நகரில் 1,500 சட்டம் – ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சனிக்கிழமை பகல் முதல் நள்ளிரவு 12 மணி வரை கடற்கரையில் புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்துக்கு அனுமதி உண்டு. ஞாயிறு அதிகாலை 1 மணிக்குமேல் கடற்கரையில் அனுமதி இல்லை. நகரில் 5 இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பிரபலங்களை வைத்து புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்தப் பேட்டியின்போது போக்குவரத்து எஸ்பிக்கள் மாறன், மோகன்குமார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.