போபால்: சரியாக வாசிக்க தெரியவில்லை என்று கூறி ஐந்து வயது பிஞ்சு குழந்தையின் கையை டியூசன் ஆசிரியை முறுக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேசத்தின் ஹபிகஞ்ச் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது ஐந்து வயது பெண் குழந்தையை பிரபல பள்ளியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டனர். இதற்காக வீட்டிற்கு அருகிலேயே குழந்தைக்கு டியூசன் ஏற்பாடு செய்துள்ளனர். பிரயாக் விஸ்வகர்மா என்ற இளம்பெண் குழந்தைக்கு டியூசன் எடுத்துள்ளார். தினசரி குழந்தை டியூசனுக்கு சென்றுவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாயன்று பச்சைக்கிளி என ஆங்கிலத்தில் எழுதி குழந்தையை ஆசிரியை வாசிக்க செய்துள்ளார். இதனை சரியாக வாசிக்காத நிலையில் குழந்தையின் கையை பிடித்து ஆசிரியை முறுக்கியுள்ளார். கடுமையாக முறுக்கியதில் வலியில் குழந்தை கதறி துடித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் குழந்தையை மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட டியூசன் ஆசிரியை மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் டியூசன் ஆசிரியையான இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.