மதுரை: ரயில் நிலையங்களை சீரமைப்பதை தெற்கு ரயில்வே அதிமுக்கிய பணியாக மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் மொததமாக 9 ரயில் நிலையங்கள் மறு உருவாக்கம் பெற இருக்கின்றன. இந்த ஒன்பது ரயில் நிலையங்களில் ஒன்றான மதுரை ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் துவக்கி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.
நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் பரிசோதனை, மரங்கள் மற்றும் போக்குவரத்து கணக்கெடுப்பு அசையும் அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு ஆகிய முன்னேற்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. சீரமைப்பு பணிகளுக்காக நிலப்பரப்பில் உள்ள ரயில்வே பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் அலுவலகப் பணிகள், திட்ட மேலாண்மை பணிகள், பணிகள் சம்பந்தப்பட்ட பயனாளர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
புறநகர் இல்லா ரயில் நிலைய குழுவில் இரண்டாவது பிரிவில் உள்ள மதுரை ரயில் நிலையம் அன்னை மீனாட்சி குடி கொண்டிருக்கும் கோவில் மாநகர் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 96 ரயில்கள் கையாளப்பட்டு வருகின்றன. அதிக ரயில்கள் கையாளப்படும் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக தினந்தோறும் 51,296 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ரூபாய் 347.47 கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு பணிகளுக்காக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு செப்டம்பர் 22 அன்றே ஒப்பந்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிகளைத் துவங்கி 36 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பணிகளை தொடர்ந்து கண்காணிக்க மும்பையில் சேர்ந்த தனியார் திட்ட மேலாண்மை சேவை நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தின் கிழக்குப்புறமும் மேற்கு புறமும் நவீன வசதிகளுடன் இரு முனையங்கள் அமைய இருக்கின்றன. கிழக்கு நுழைவாயிலில் இரண்டு அடுக்கக வாகன காப்பகம் மேற்கு நுழைவாயிலில் ஒரு அடுக்கக வாகன காப்பகம் என மூன்று வாகன காப்பகங்கள் அமைய இருக்கின்றன. ரயில் நிலையத்தையும் பெரியார் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை, பார்சல்களை கையாள தனி மேம்பாலம், கிழக்குப் பகுதியில் உள்ள வாகன காப்பகங்களுக்கு செல்ல இரண்டு நடை மேம்பாலங்கள் அமைய இருக்கின்றன.
கிழக்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடம் இரண்டு மாடி கட்டிடமாக 22,576 சதுர மீட்டரில் அமைய இருக்கிறது. தரை தளத்தில் வருகை புறப்பாடு பயணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எளிதாக சென்று வரும்படி வசதிகள் அமைய உள்ளன. மேலும் உலகத்தரம் வாய்ந்த கழிப்பறைகள், பொருள் வைப்பறைகள், குழந்தைகளுக்கான வசதிகள், தாய்ப்பால் ஊட்டும் அறைகள், உதவி மையங்கள், பயணிகள் பயன்பாட்டு வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமைய இருக்கின்றன. முதல் தளத்தில் பயணிகள் காத்திருப்பு அறைகள், உணவகங்கள், சிறு வணிகக் கடைகள், கழிப்பறைகள் ஆகியவை அமைய இருக்கின்றன. இரண்டாவது தளம் வணிக வளாக பயன்பாட்டுக்கு வழங்கப்படும். ரயில் நிலைய வகுப்பு நமது பகுதி கலாச்சார கட்டிடக்கலையை நினைவுபடுத்தும் வகையில் அமையும்.
மறு சீரமைப்பில் முக்கிய அம்சமாக கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடங்களை இணைத்து ரயில் பாதைகளுக்கு மேலாக பயணிகள் காத்திருப்பு அரங்கு அமைய இருக்கிறது. இந்த அரங்கில் இருந்து பயணிகள் எளிதாக தங்களுக்குரிய நடைமேடைகளுக்கு சென்றுவர இரண்டு ஜோடி எஸ்கலேட்டர்கள், இரண்டு மின் தூக்கிகள், 4 நடை மேம்பால படிக்கட்டுகள் அமைய இருக்கின்றன. இந்த அறையில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளுடன் நடைமேடைகளில் வரும் ரயில்களை காணும் வகையிலும் அமைய இருக்கிறது.
தற்போதைய மேற்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த பயணிகள் வசதிகளுடன் இருமாடி கட்டிடமாக அமையும். இந்த கட்டிடத்தில் வருகை புறப்பாடு பயணிகளுக்கு தனி தனி பகுதிகள் பயண சீட்டு அலுவலகங்கள் ரயில்வே சேவை அலுவலகங்கள் மற்றும் பயணிகளுககான அடிப்படை வசதிகள் ஆகியவை அமைய இருக்கின்றன.
கிழக்கு நுழைவாய்ப்பு பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தரைதளத்திற்கு மேல் இரண்டு தளங்கள் கொண்ட 9,430 சதுர மீட்டர் வாகன காப்பகம் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தரை தளத்திற்கு மேல் மூன்று தளங்கள் கொண்ட 2,822 சதுர மீட்டர் வாகன காப்பகமும் அமைய இருக்கிறது. மேற்கு நுழைவாயிலில் தரைதளத்திற்கு மேல் ஒரு தளத்துடன் 2,580 சதுர மீட்டரில் வாகன காப்பகம் அமைய இருக்கிறது. அனைத்து வாகனங்களும் ரயில் நிலையப் பகுதியில் சிக்கல் இல்லாமல் சென்று வரும் வகையில் முகப்பு சாலைகள் அமைய இருக்கின்றன.