திருச்சி: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான மீனாட்சிக்கு முதல்வர் மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். இந்த திட்டத்தின் சேவையை மேலும் மேம்படுத்திட 10,969 பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் 15,366 அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு இரத்த அழுத்தம் கண்டறியும் டிஜிடல் இரத்த அழுத்த கருவிகளை முதல்வர் வழங்கினார். மேலும், மு.க.ஸ்டாலின், 12கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.