புதுடெல்லி: வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இந்தியாவில் பணியாற்ற அனுமதி அளித்தது தொடர்பாக நாடு முழுவதும் 91 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடிப்பவர்கள் இந்தியாவில் நடத்தப்படும் வெளிநாடு மருத்துவ பட்டதாரி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் இங்கு மருத்துவராக பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் வெளிநாடு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சில மாநில மருத்துவ கவுன்சில்கள் போலி சான்றிதழ்களை வழங்கியுள்ளன.
இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் நாட்டின் பல்வேறு மாநில மருத்துவ கவுன்சிலில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மொத்தம் 91 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடாக அனுமதி அளித்த 14 மாநில மருத்துவ கவுன்சில் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மருத்துவ கவுன்சில்கள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாத 73 பேருக்கு இந்தியாவில் பணியாற்ற போலி சான்றிதழ்களை வழங்கியுள்ளன.