புதுடெல்லி: ரஷ்யாவுடன் சேர்ந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளை போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்த ஏவுகணைகள் சீறிப்பாயும் வேகம் மற்றும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய விமானப் படை நேற்று மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒன்றை எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் இருந்து கடலில் 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தியது. இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை வங்காள விரிகுடா பகுதியில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இதன் மூலம் எஸ்யு-30 போர் விமானத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள தரை அல்லது கடல் இலக்குகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்தும் திறனை இந்திய விமானப் படை மேம்படுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.