சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிச. 30) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
டிச.31, ஜன.1, 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
29-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 9 செமீ, மாஞ்சோலை, காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 6 செமீ, நம்பியார் அணையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. வடதமிழக உள் மாவட்டங்களில் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.