திமுகவின் முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திமுகவின் முன்னாள் எம்.பி மஸ்தானின் தம்பி மகளுக்கும் ஹோமியோபதி டாக்டரான இம்ரானுக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மஸ்தானுக்கு நம்பிக்கை கூறிய ஒரு ஆள் தேவைப்பட்டதால் மருமகனான இம்ரானை தன்னுடன் வைத்துள்ளார். அடிக்கடி வெளியூர் செல்லும் போதெல்லாம் அவரை ஓட்டுனராகவும் பயன்படுத்தி உள்ளார். தனது மாமனார் முன்னாள் எம்பி என்பதால் திமுகவில் தனக்கு பதவி கிடைக்கும் எனவும் இம்ரான் நம்பிக்கையில் இருந்துள்ளார்.
திமுகவின் முன்னாள் எம்பி மஸ்தானிடம் செலவுக்காக அடிக்கடி இம்ரான் பணம் பெற்றுள்ளார். வங்கி கணக்கு மூலம் 8 லட்சம் ரூபாய் வரையும் நேரில் பார்க்கும் பொழுது எல்லாம் ஒரு லட்சம், 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய பணம் தேவைப்பட்டதால் இம்ரானிடம் மஸ்தான் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவரும் முன்னிலையிலும் பணம் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. தனக்கு திமுகவில் பதவியும் வாங்கித் தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டு அசிங்கப்படுத்தியதால் ஆத்திரமடைந்த இம்ரான் தனது மர்மனார் மஸ்தானை கொல்ல சதி தீட்டியுள்ளார். இது குறித்து தனது சித்தி மகன் தமீம் என்கிற சுல்தானிடம் தெரிவிக்கவே, அவன் மூன்று லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்தால் போட்டு தள்ளி விடலாம் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் செங்கல்பட்டு அருகே தனக்கு தெரிந்த ஒருவரிடம் பணம் வாங்கி தருவதாக கூறி இம்ரான் மஸ்தானை அழைத்துச் சென்றுள்ளார். தனது மருமகன் தானே என்ற நம்பி அவருடைய காரில் மஸ்தான் சென்றுள்ளார். அப்பொழுது குரோம்பேட்டை அருகே சுல்தான் மற்றும் அவருடைய நண்பர் நசீம் ஆகியோர் காரில் ஏறியுள்ளனர்.
இதனை அடுத்து செங்கல்பட்டு டோல்கேட் பகுதி அடுத்த பழவேலி காட்டுப்பகுதியில் காரை திடீரென நிறுத்தி உள்ளனர். கத்தியால் கொன்றால் தெரிந்து விடும் என்பதால் மூக்கு மற்றும் வாயைப் பொத்தி மஸ்தானை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தமீம் தன்னுடைய நண்பர் லோகேஷ் காரில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து மறுநாள் காலை கூடுவாஞ்சேரியல் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக மஸ்தான் துடித்துக் கொண்டிருப்பதாக கூறி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனை அடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மஸ்தான் உயிரிழந்ததாக தெரிவித்து ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். திமுகவின் முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மகன் ஷாநவாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அனைத்து உண்மையும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. காவல்துறையினரின் விசாரணை முடிவில் கொலையில் தொடர்புடைய 5 நபர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.