அதிகரிக்கும் காற்று மாசு – டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை!

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையக் கூடும் என்பதால் கட்டுமானம், கட்டுமான இடிப்பு பணிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காற்றின் தரக் குறியீடு என்பது மோசமான

மற்றும் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகி வந்தது. இதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இருப்பினும், குளிர் காலம் ஆரம்பித்தவுடன் காற்றின் வேகம் மிகவும் குறைவாக உள்ளதால், காற்றின் தரத்தில் பெரிய அளவிலான முன்னேற்றம் இல்லாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பகுப்பாய்வு கூட்டத்தில், டெல்லியில் காற்றின் தரமானது வரும் நாட்களில் மேலும் மோசமடையும் எனவும், குறிப்பாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை அடுத்து மத்திய அரசின் காற்று தரக்குழு, டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், GRAP எனப்படும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் மூன்றாவது நிலையை முழுமையாக அமல்படுத்த டெல்லி அரசுக்கு பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிக்குள் அவசியமற்ற கட்டுமானங்களை மேற்கொள்ளவும், கட்டுமான இடிப்பு, டிரில்லிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, எரிபொருளில் இயங்காத செங்கல் சூளைகள் மற்றும் சூடான கலவை ஆலைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதே போல், கல் உடைக்கும் இயந்திரங்கள், சுரங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்சாலைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காற்றின் தரம் மேலும் மோசம் அடைந்தால், பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு டெல்லி அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, காற்று மாசு மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக, டெல்லியில், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.