ரிஷப் பண்ட் இன்று (டிசம்பர் 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட காயம் மற்றும் அவரது விபத்து தொடர்பான தகவல்களை பிசிசிஐ அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், “இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், இன்று (வெள்ளி) அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே கார் விபத்துக்குள்ளானார். முதலில் அவசர சிகிச்சைக்காக ரூர்க்கி அருகே உள்ள ‘Shaksham’ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மேற் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப் பண்ட்டின் வலது முழங்கால் மற்றும் வலது மணிக்கட்டில் தசைநார் கிழிவும், நெற்றி, கணுக்கால் மற்றும் முதுகில் சில சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. ரிஷப் பண்ட்டிற்கு சிகிக்சை அளிக்கும் மருத்துவக் குழுவினருடனும், குடும்பத்தினருடனும் பிசிசிஐ தொடர்பில் உள்ளது. அவருக்குத் தேவையான சிகிக்சை மற்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளிவரத் தேவையான அனைத்தையுமே பிசிசிஐ அமைப்பு கவனித்துக்கொள்ளும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.