உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கிடவும், நாட்டின மீன் உற்பத்தியை அதிகரித்திடவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்த பிரதம மந்திரி திட்டங்கள் மூலம் மீன்வளத்துறை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, உள்நாட்டு மீன் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், நாட்டின மீன் குஞ்சுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து அவற்றை காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவிடன், பிரதான் மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டம் 2021 – 22 ஆண்டின் கீழ், ஆறுகளில் இப்படி நாட்டு இன நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ஒரு கோடியே, 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் செயல்படும் மீன் பண்ணை, கரூரை அடுத்த மாயனூரில் அமைந்துள்ள அரசு மீன் பண்ணை ஆகியவற்றில் வளர்த்தெடுக்கப்பட்ட சுமார் 3,12,000 மீன்கள், ரகங்கள் வாரியாக மீன் குஞ்சுகளை மாயனூர் கதவணை அருகே காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் கல்பாசு, கெண்டை மீன், விரலி மீன், சேல் கெண்டை, மிர்கால், ரோகு குஞ்சுகள் ஆகியவை காவிரி ஆற்றில் விடப்பட்டன.
இதுகுறித்து ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில் ,
“காவிரியில் விடப்படும் மீன் குஞ்சுகள் பன்மடங்கு பெருகி, பெரிய மீன்களாக வளர்ச்சியடைந்த பின்னர், இம்மீன்களை மீனவர்கள் பிடித்து, விற்பனை செய்யும்போது அவர்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் மேம்படும். மேலும், மக்களுக்கும் சுத்தமான, சுகாதாரமான நாட்டின மீன் ரகங்கள் எளிதில் கிடைக்கும். இந்த வகையில், காவிரியில் 1,40,000, அமராவதி ஆற்றில் 1,72,000 என மொத்தமாக இரண்டு ஆறுகளிலும் சேர்த்து 3,12,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.
காவிரில் கிலோமீட்டருக்கு 2,000 மீன்குஞ்சுகள் வீதம் மொத்தமுள்ள 70 கிலோமீட்டருக்கும் கணக்கு செய்து மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இதன் மூலம், மீனவர்களுக்கு வாழ்வாதாரமும் பெருகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.