கோயம்புத்தூரில் இருந்து ஆனைகட்டி வழியாக கேரள மாநிலம் மன்னார்காட்டிற்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு மலைப்பகுதி என்பதால், கோவையில் இருந்து புறப்படும் பேருந்து ஆனைக்கட்டியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு விட்டு, பின்னர் மன்னார்காட்டிற்கு செல்லும்.
இந்த பேருந்து நேற்று மதியம் வழக்கம் போல் கோவையில் இருந்து மன்னார்காட்டிற்கு புறப்பட்டது. அதன் படி, பேருந்து ஆனைக்கட்டி அருகே வந்த போது பிரேக் பிடிக்காததனால் பேருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையின் மீது மோதியது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாததால், மீண்டும் வெள்ளிங்கிரி பேருந்தை இயக்கி சென்று விட்டார்.
இதையடுத்து வெள்ளிங்கிரி தனது பணி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் அந்த பேருந்துக்கு குப்புராஜ் என்பவர் ஓட்டுநராக வந்தார். அவரிடம் பிரேக் பிடிக்காததை வெள்ளிங்கிரி தெரிவிக்கவில்லை. வழக்கமாக அந்த பேருந்து கோவையில் இருந்து மன்னார்காட்டிற்கு புறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பேருந்தை ஆனைகட்டியில் நிறுத்துவதற்கு முற்படும் போது பிரேக் பிடிக்க வில்லை. இதனால், பேருந்து அங்குள்ள அய்யப்பன் கோவிலில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்து கொண்டு அருகே இருந்த உணவகத்திற்குள் புகுந்தது.
இதில், ஒரு சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கு வந்த மற்றொரு அரசு பேருந்தை வழி மறித்து, போக்குவரத்து கிளை பொதுமேலாளர் சம்பவ இடத்திற்கு வந்தால் மட்டுமே பேருந்து விடுவிக்கப்படும் என்றுத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பேருந்து விடுவிக்கப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்ததாவது, “ஆனைக்கட்டி மலைப்பகுதியில் இயங்கும் அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்குகின்றன. இதனால் அடிக்கடி பேருந்துகள் பழுதடைந்து விபத்துக்குள்ளாகின்றது” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.