அஸ்ஸாமில் 27 வயது இளைஞர் ஒருவர், காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஃபேஸ்புக் லைவ்-ன்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தார் காதலுக்கு மறுப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, திங்கள்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் மருத்துவ பொருள்கள் விற்பனை நிபுணர் ஜெயதீப் ராய் என்றும், ஜெயதீப் சில்சாரில் உள்ள தன்னுடைய வாடகை அறையில் தூக்குப்போட்டு உயிரிழந்தார் என்றும் தெரியவந்திருக்கிறது.
ஜெயதீப் கடைசியாக ஃபேஸ்புக் லைவ்-ல், “நான் என்னுடைய திருமண விருப்பத்தை அவளுக்கு அனுப்பினேன். ஆனால் அனைவரின் முன்னிலையிலும் அவள் அதை மறுத்துவிட்டாள். பிறகு அவளுடைய மாமா என்னிடம் வந்து, எங்களின் உறவு காரணமாக அவளைக் கொன்றுவிடுவேன் என்றார். என்னால் அவள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இப்போது இந்த உலகத்தை விட்டு நான் செல்கிறேன். என்னுடைய அம்மா, மாமா, அத்தை, தங்கை, அண்ணன் ஆகியோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரையுமே நான் நேசிக்கிறேன். என் காதலியை அதிகமாக நேசிக்கிறேன். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது” என்று கூறிவிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயதீப்பின் அண்ணன், “எங்கள் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. என்ன செய்வதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால்தான் இதுவரை நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. முழு குடும்பத்தையும் அவன் தான் கவனித்துவந்தான். பெண்ணின் குடும்பத்தினர் என் சகோதரனுக்கு அழுத்தம் கொடுத்தனர். பெண்ணின் மாமா அவளைக் கொன்றுவிடுத்தாக மிரட்டியிருக்கிறார். அடுத்த நடவடிக்கை குறித்து இன்று சில்சார் காவல் நிலையத்துக்குச் சென்று முடிவுசெய்வோம்” என்று கூறினார்.
அதையடுத்து அந்தப் பகுதியின் போலீஸ் அதிகாரி நுமல் மஹந்தா, “பாதிக்கப்பட்ட குடும்பத்திடமிருந்து எங்களுக்கு இன்னும் முறையான புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும், நாங்கள் விசாரணையைத் தொடங்கிவிட்டோம்” எனத் தெரிவித்தார்.