ஆமதாபாத்,:பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென், 99, உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை குஜராத் மாநிலம் ஆமதாபாதில் காலமானார். தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக புதுடில்லியில் இருந்து ஆமதாபாதுக்கு வந்த பிரதமர், காலை 9:30க்கு தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். அடுத்த ஒன்றரை மணி நேரத்திலேயே தன் பணிக்கு திரும்பிய பிரதமர், ‘வந்தே பாரத்’ ரயில் சேவை துவக்க விழாவில் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ‘கடமை’ என்ற மூன்றெழுத்துக்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி திகழ்வதாக, நாடு முழுதும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீடு, குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே ராய்சன் என்ற கிராமத்தில் உள்ளது. பிரதமரின் தாய் ஹீரா பென், இங்கு தான் வசித்து வந்தார்.
பிரதமர் குஜராத்துக்கு செல்லும்போதும், பிறந்த நாளின்போதும் தன் தாயை சந்தித்து பேசுவதுடன், அவரிடம் ஆசி பெறுவதும் வழக்கம்.
அஞ்சலி
இந்நிலையில், ஹீரா பென்னுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆமதாபாதில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில், 28ல் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த பிரதமர் ஆமதாபாத் வந்து, தன் தாயை பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் தகவல்களை கேட்டறிந்தார். ஒரு மணி நேரத்துக்குப் பின், அங்கிருந்து புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், ஹீரா பென்னின் உடல்நிலை நேற்று அதிகாலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அதிகாலை 3:30க்கு ஹீராபென் காலமானார். இது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது; பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக புதுடில்லியில் இருந்து ஆமதாபாதுக்கு விமானத்தில் வந்த பிரதமர், காந்திநகரில் உள்ள தன் சகோதரர் பங்கஜ் வீட்டுக்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த தன் தாய் உடலுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், பின் தாய் காலில் விழுந்து வணங்கினார்.
சிறிது நேரத்துக்குப் பின், அந்த வீட்டிலிருந்து பிரதமர் மோடியும், அவரது சகோதரர்களும் சேர்ந்து, துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேனுக்கு, தங்கள் தாயின் உடலை தோளில் சுமந்து வந்தனர்.
ஹீராபென் உடல் வேனில் வைக்கப்பட்டதும், தாயின் உடலுக்கு அருகிலேயே சோகத்துடன், கைகளை கூப்பியபடி பிரதமர் அமர்ந்திருந்தார். இறுதிச் சடங்கிற்காக காந்தி நகரின் புறநகர் பகுதியில் உள்ள மயானத்துக்கு, ஹீராபென்னின் உடல், வேனில் எடுத்துச் செல்லப்பட்டது.
வழக்கமான பணி
காலை, 9:30க்கு ஹீரா பென்னின் உடல் மயானத்தை சென்றடைந்ததும், பிரதமரும், அவரது சகோதரர்களும், தாயின் உடலுக்கு இறுதிச் சடங்குளை செய்தனர். மிக எளிமையாக சடங்குகள் நடந்தன.
இதன்பின், பிரதமரும், அவரது சகோதரர்களும், தாயின் உடலுக்கு தீ மூட்டினர். இறுதிச்சடங்கில், பிரதமரின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட ஒரு சில தலைவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
இறுதிச் சடங்கு நடந்து முடிந்த அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், அதாவது, காலை 11:00 மணிக்கு, பிரதமர் தன் வழக்கமான பணிக்கு திரும்பினார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை நேற்று பிரதமர் நேரடியாக துவக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாயின் மறைவை காரணமாக வைத்து, இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டாம் என கூறிய பிரதமர், காலை 11:00 மணிக்கு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
கடமை உணர்வு
ஹீரா பென்னின் இறுதி ஊர்வலத்தில் போலீஸ் கெடுபிடி, போக்குவரத்து நெரிசல், வி.வி.ஐ.பி., வருகை, கோஷங்கள் என எதுவும் இல்லை.
மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தகவல் தெரிந்து, அவர்கள் புறப்பட தயாராவதற்கு முன்பே, ஹீரா பென்னின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்து, பிரதமரும் தன் வழக்கமான பணிக்கு திரும்பி விட்டார்.
பிரதமர் மோடியின் இந்த கடமை உணர்வு, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பிரதமரின் உருக்கமான பதிவு
தன் தாயின் மறைவையொட்டி, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதாவது:ஒரு போற்றத்தக்க நுாற்றாண்டு, கடவுளின் காலடியை சென்றடைந்துள்ளது. ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், அர்ப்பணிப்பான வாழ்க்கை ஆகியவற்றை, என் தாயிடம் உணர்ந்தேன். அவரது பிறந்த நாளன்று அவரை சந்தித்தபோது, ‘புத்திசாலித்தனத்துடன் பணியாற்றுங்கள். துாய்மையான வாழ்க்கையை வாழுங்கள்’ என, ஆசி வழங்கினார். அவரது அந்த வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் இருக்கும். இவ்வாறு பிரதமர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பாரத பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் தாய், ஹீராபென் மோடி ஆன்மா சாந்தியடைய, காஞ்சிபுரம் தேவி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஒரு தாய் தன் குழந்தைகளை தியாக உணர்வுடன் வளர்க்கிறார். உணவுடன் நெறிமுறைகளையும் ஊட்டுகிறார். இதுதான் மதிப்புமிக்க, பொறுப்பான குடிமகனை உருவாக்குகிறது. பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் துயருக்காக பிரார்த்தனை செய்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பூடான் பிரதமர் டாக்டர் லோடே ஷெரிங் உட்பட, பல நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மற்ற நாட்டு தலைவர்கள் இரங்கல்
நம் நாட்டில்…
ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி., ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா, பா.ஜ., தலைவர் நட்டா, ராஜ்நாத் சிங், கட்கரி, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உட்பட மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் உட்பட அனைத்து மாநில முதல்வர்களும் பிரதமரின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்