சென்னை: மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, 51 கிராம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மீனவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர் மைக்கேல் நாயகம், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அந்தோணி மேரி (65). கடந்த 2021 ஜூலை 28ம் தேதி மைக்கேல் நாயகம் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் அதே பகுதியை சேர்ந்த மீனவர் சகாய அலெக்ஸ் (43), வீட்டில் தனியாக இருந்த அந்தோணி மேரியை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த தாலி செயின் உள்பட 51 கிராம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.
இச்சம்பவம் கேள்விப்பட்டு கரைக்கு திரும்பிய மைக்கேல் நாயகம் அளித்த புகாரின் மீது காசிமேடு போலீசார் அலெக்ஸை கைது செய்து அவர் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடித்த நகையை ராயபுரத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சங்க வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்க வங்கிக்கு சென்று நகையை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். வழக்கை விசாரித் நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சகாய அலெக்சுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, உரிய சாட்சி, ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.