மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது

திருவனந்தபுரம்,

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ந் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன் பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும்.

மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.