புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதிக்கான பாராளுமன்றம் கூடும் மார்ச் மாதம் புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்படும் என தெரிகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் நடைபெறும் என பிரஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி வழக்கமாக ஜனவரி 30 அல்லது 31 ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும்.
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கமாக முதல் பகுதி பிப்ரவரி 8 அல்லது 9-ம் தேதி முடிவடையும். அமர்வின் இரண்டாம் பகுதி வழக்கமாக மே மாத தொடக்கம் வரை தொடரும். இந்த அமர்வின் இரண்டாம் பகுதி தற்போதைய கட்டமைப்பிற்கு அருகில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பார்லிமென்ட் கட்டிடம், சென்ட்ரல் விஸ்டாவின் மறுமேம்பாட்டின் ஒரு பகுதியாகும். பிரதமர் நரேந்திர மோடி 2020 டிசம்பரில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்படும் புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, நூலகம், பல குழு அறைகள், உணவருந்தும் பகுதிகள் மற்றும் போதுமான வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் இருக்கும்.