‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்
சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளின் கொரோனா பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. அந்த நாடுகளில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று கூறுகிற ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நாளை நடைமுறைக்கு வருகிறது
இந்த கொரோனா பரிசோதனை, இந்திய பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு நடந்திருக்க வேண்டும் என்றும், கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழை ‘ஏர் சுவிதா’ இணைய தளத்தில் அவர்கள் பதவிவேற்றம் செய்து விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) நடைமுறைக்கு வருகிறது. இந்த நிலையில் திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களின்படி இந்தியா சர்வதேச பயணிகளுக்கான பரிசோதனை நடைமுறைகளை மாற்றியமைக்கும்படி விமான நிறுவனங்களை சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விமான நிறுவனங்களுக்கு உத்தரவு
இது தொடர்பாக விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்களுக்கு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஏர் சுவிதா இணையதளத்தில் சுய அறிவிப்பு படிவங்களைச் சமர்ப்பித்த 6 நாடுகளில் இருந்து பயணம் செய்யும் சர்வதேச பயணிகளுக்கு மட்டுமே ‘போர்டிங் பாஸ்’களை வழங்கும் வகையில் விமான நிறுவனங்கள் தங்கள் பரிசோதனை நடமுறைகளை (செக்-இன்) மாற்றியமைக்குமாறு உத்தரவிடப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.