முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு: 5 பேர் கைது | பின்னணி தகவல்கள்

செங்கல்பட்டு: முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநர் உட்பட 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

எம்பி மஸ்தான்: சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார். இதனிடையே கட்சியில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி அவரது வீட்டில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பழவேலி அருகே வந்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்படுவது:

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார்: தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, உரிய விசாரணை நடத்த கோரி, மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் போலீஸார் பறிமுதல் செய்த கார்

இயற்கைக்கு மாறான இறப்பு: இந்த புகாரின்பேரில், இயற்கைக்கு மாறான இறப்பு என்று வழக்குப் பதிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மஸ்தானின் இறப்பில் சந்தேகம் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மூச்சுத்திணறல் மூலம் மரணம்: இறந்த மஸ்தானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் வாக்குமூலத்தின் மூலம், மஸ்தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளது போலீஸாருக்கு தெரியவந்தது. இந்நிலையில், மஸ்தான் இறந்த தினத்தன்று வாகனம் ஓட்டிச் சென்றதாக கூறப்படும், மஸ்தானின் உறவினர் இம்ரான் பாஷா மீது, போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது முன்னுக்குப் பின் முரணான தகவல்களால், போலீஸார் அவரை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.

சிசிடிவி, தொலைபேசி உரையாடல் கண்காணிப்பு: போலீஸார் விசாரணையில், முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலம் அளித்த இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள், அவர் மீதான சந்தேகத்தை போலீஸாருக்கு தீவிரப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த தினத்தன்று, மஸ்தான் தனது வீட்டிலிருந்து செங்ல்பட்டு சென்ற வழியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களையும், இம்ரான் பாஷாவின் தொலைபேசி உரையாடல்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர். இதன்மூலம், இம்ரான் பாஷா சம்பம் குறித்து கூறிய விவரங்கள் பொய்யானவை என்பது தெரியவந்தது. மேலும், மஸ்தான் சென்ற காரில், இம்ரான் பாஷா தவிர, மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

அம்பலமான கொலைத் திட்டம்: இதையடுத்து, இம்ரான் பாஷாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது உறவினர் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தவுபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி டாக்டர் மஸ்தானை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

கொலைக்கான காரணம் என்ன? – போலீஸாரிடம், இம்ரான் பாஷா அளித்த வாக்குமூலத்தில், “டாக்டர் மஸ்தான், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாலும், மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். பின்னர், அவரிடமிருந்து சிறுக சிறுக ரூ.15 லட்சம் வரை கடனாகப் பெற்றேன். அந்த கடனைக் கேட்டு மஸ்தான் தொந்தரவு செய்து வந்தார். இதனால், எனது உறவினர் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தவுபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி பைனான்சியரிடம் பணம் பெற போவதாக கூறி, மஸ்தானை நம்ப வைத்து அவரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

காரில் இம்ரானும், தமீம் (எ) சுல்தான் மற்றும் நஷீர் ஆகியோருடன் செல்லும்போது, இவர்களது காரை தவுபீக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை வேறு ஒரு காரில் பின்தொடர்ந்து வர சொல்லி விட்டு செங்கல்பட்டு நோக்கி அழைத்து சென்றுத் தனியான இடத்தில் காரை நிறுத்தி காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நஷீர் டாக்டர் மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து பிடித்துக் கொள்ள சுல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாகவும் பின்னால் காரில் வந்த தவுபீக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்து மற்ற எதிரிகளை அங்கிருந்து தப்பிக்க உதவியதாகவும், பின்னர் டாக்டர் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாராடைப்பால் இறந்து விட்டதாக மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதையும் ஒப்புக்கொண்டார்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இம்ரான் பாஷா, தமீன் (எ) சுல்தான், நஷீர், தவுபீக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் டாக்டர் மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.