அவனியாபுரம்: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி: மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது 186.31 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது மீதமுள்ள நிலங்களும் விரைவாக கையகப்படுத்தப்படும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுத்தான் பொங்கலுக்கு கரும்புகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
சென்னைக்கு புதிதாக வர உள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஊர் மட்டும் பிரச்னையாக உள்ளது. அங்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மூன்று மடங்கு கூடுதலாக பணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது ஓரிரு நாட்களில் நடைபெறும் பணி அல்ல. அவர்களை திருப்திப்படுத்தி, அதன்பிறகு தான் நிலங்களை கையகப்படுத்த முடியும். 100 சதவீதம் கட்டாயம் பரந்தூர் விமான நிலையம் வரும். எந்த பிரச்னையாக இருந்தாலும் மக்களோடு கலந்து பேசி அதற்கு பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு கூறினார்.