திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளரான முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 21-ம் தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சென்னையில் இருந்து காரில் சென்றார். காரை அவரது உறவினர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. கூடுவாஞ்சேரி அருகே கார் வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரது மகன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் கூறப்படுவதாவது, இமரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையில் தொடர்புடைய இம்ரான், சுல்தான், நசீர் தவ்பீக், லோகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.