முத்துப்பேட்டை: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்தவர் சேக்நூர்தீன்(34). தொழிலதிபர். இவர் தனது மனைவி உட்பட மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பிரார்த்தனை செய்ய நாகூர் தர்காவிற்கு சென்றிருந்தார். அங்கு வழிபாடு செய்துவிட்டு நேற்று நள்ளிரவு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் காரில் ஊர் திரும்பி ெகாண்டிருந்தனர்.
முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலை காத்தவராயன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை கிளம்பியது. இதனை கண்ட சேக் நூர்தீன் காரை நிறுத்தினார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் கார் திடீரென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சேக் நூர்தீன் காரில் இருந்த அனைவரையும் கதவை திறந்து வெளியேற்றி காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறு காயங்கள் இன்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.