மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெயரில் போலியாக இணையதளம் ஒன்றை தொடங்கி, 1000 ரூபாய் அனுப்பினால் மீனாட்சியம்மனின் குங்குமம் வீடு தேடி வரும் என்று, மோசடி செய்த டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகின்றனர்.
மீனாட்சியம்மனின் குங்கும பிரசாதம் மிகவும் சிறப்பு பெற்றதாக உள்ளதால், அதனை வமிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
சிலர் வெளிச்சந்தையில் குங்கும பிரசாதத்தை விற்பனையும் செய்துவரத்தக்க சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ரூ.1000 டிரஸ்ட் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினால் மாதந்தோறும் முதல் வாரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட குங்கும் வீடு தேடி வரும் என்று, கடச்சனேந்தல் ‘காவேரி சேவா’ என்ற அறக்கட்டளை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் மோசடியான விளம்பரத்தை பதிவு செய்துள்ளது.
இந்த விளம்பரத்தை பார்த்த பல வெளிநாட்டு பக்தர்கள் ரூ.1000 செலுத்தியதாக கூறி மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ‘காவேரி சேவா’ அறக்கட்டளை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.