'நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார்' – அசாம் முதல்வர் ஆரூடம்!

“2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் பிரதமராக, மூன்றாவது முறையாக, நரேந்திர மோடி மீண்டும் பதவி
ஏற்பார்,” என, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. எனினும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ரீய சமிதி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் இந்த எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவுவது, பாஜகவுக்கு மேலும் சாதகமாக உள்ளது.

இதனை விட முக்கியமான விஷயம், 75 வயதுக்கு மேல் யாருக்கும் பதவிக் கிடையாது என்பதுடன், யாரும் உயர் பதவியிலும் நீடிக்க முடியாது என்பது பாஜகவில் எழுதப்படாத சட்டமாகவே இருந்து வருகிறது. நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தி கட்சியை வளர்த்த அத்வானி 2014 ஆம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் போனதற்கு 75 என்ற வயது வரம்பு தான் முக்கிய காரணம்.

அதுவே தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு 2024 ஆம் ஆண்டில் 74 வயதாகி விடும். அந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் அவரே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்தலிலும் ஒரு வேளை பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் பிரதமராகி மோடி ஹாட்ரிக் சாதனை புரிந்தாலும், 2025 ஆம் ஆண்டில் அவருக்கு 75 வயதாகி விடும்.

இந்நிலையில், “2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் பிரதமராக, மூன்றாவது முறையாக, நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்பார்,” என, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் பதவிக்கு யார் வேண்டும் என்றாலும் போட்டியிடலாம். அதில் எந்த தவறும் கிடையாது. வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வெல்லப் போகிறவர்கள் பற்றி எனக்கு அந்த அக்கறையும் இல்லை,” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் பாஜகவையும் தனது குருவாக கருதுகிறேன் என்று ராகுல் காந்தி கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ராகுல் காந்தி அப்படி நினைத்தால் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்திற்கு செல்லட்டும். பாரத மாதாவிற்கு தலைவணங்கி விட்டு குருதட்சணை செய்து கொள்ளட்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.