புதுடெல்லி: நாட்டில் பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் ஆடம்பரம் என்றாகிவிட்டன என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதே தற்போது சிரமமான ஒன்றாக மாறிவிட்டது என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதை ச்சுட்டிக்காட்டி, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: ”நாட்டில் தற்போது நிலவும் சூழல், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் ஏற்படுத்தி உள்ள ஆழமான கவலையுடன் நான் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு பல்வேறு அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த அடிப்படை உரிமைகள் தற்போது ஆடம்பரம் என்றாகிவிட்டன. அரசியல், சமூகம், மதம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப செயல்படுபவர்களுக்கே இந்த அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றன.
இந்திய அரசுக்கு எதிராக இல்லாமல், நாட்டின் பன்முகத்தன்மை, பல்வேறு மத வழிபாடு, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கிய பங்களிப்பு அளித்தவர்கள் தற்போது ஒரு மத நாடு எனும் சிந்தனையின் மூலம் நசுக்கப்பட்டு வருகிறார்கள். சிறுபான்மையினரின் சமூக, அரசியல், பொருளாதார நிலை தற்போது பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசின் இரும்புப் பிடி கொள்கையின் கீழ் ஜம்மு காஷ்மீர் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தபோது அளித்த அரசியல் சாசன உத்தரவாதம் தற்போது மீறப்பட்டுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான பேசும் உரிமையும் ஆபத்தில் இருக்கிறது. இந்த இருளான சூழலில் தவறுகளை சரி செய்வதற்கான நம்பிக்கையை நீதித்துறை மட்டும்தான் அளிக்கிறது. மிகுந்த வேதனை என்னவென்றால், தற்போது அதுவும்கூட நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இல்லை” என்று மெகபூபா முப்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.