திருப்பூர்: அவிநாசியில் நில அளவை துறை வட்டத் துணை ஆய்வாளர் மோகன் பாபு, லஞ்சம் கேட்டாதாக, அவரைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் அவிநாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைத் துறை வட்டத் துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மோகன்பாபு. இவர் பொதுமக்கள், விவசாயிகளில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள், சம்பந்தப்பட்ட அலுவலரைக் கண்டித்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலரைக் கண்டிப்பதாக கூறி நேற்று மாலை அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் திடீர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து இரவு முழுவதும் அங்கேயே இருந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை, காத்திருப்பு போராட்டம் தொடர்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், விவசாய சங்கங்களின் லஞ்ச ஒழிப்பு முகாம், அவிநாசி வட்டாரத்தில் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் சேகரிக்கும் முகாம், டிச.31-ம் தேதி ஜன. 2 வரை நடைபெறும் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் இன்று துண்டறிக்கை பிரசுரங்கள் பகிரப்பட்டன.
அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கண்டவர்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், சர்வேயர், வட்டாட்சியர் ஆகியோரிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தரும் பட்சத்தில் உடனடியாக தீர்வு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்து, அங்கு காத்திருந்தனர். அப்போது இதுபோன்ற போராட்டத்துக்கு அனுமதி இல்லை என அங்கிருந்தவர்களை அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.
லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறவழியில் போராடிய விவசாயிகளை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடிதம் அனுப்பினர். அதில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை நில அளவர் மோகன்பாபு லஞ்சம் கேட்டு தொடர்ச்சியாக விவசாயிகளை மிரட்டுவதை கண்டித்தும் அவரை பணிநீக்கம் செய்யக் கோரியும், விவசாயிகள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அறவழியில் அமைதியாக போராடி வந்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்ய காவல் துறை அனுமதி மறுத்ததால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெளியே ‘வருவாய்த் துறை அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என முகாம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஈசன் முருகசாமி, அத்திக்கடவு போராட்டக்குழு தொரவலூர் சம்பத், நவீன் உட்பட 21 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அறவழியில் போராடிய விவசாயிகளை அவிநாசி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.