தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வீரர் – வீராங்கனைகள் பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வீரர் – வீராங்கனைகள் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

15 முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண்களுக்கான பொதுப்பிரிவில் தடகளம், சிலம்பம், கபடி, இறகுப்பந்து, கையுந்து பந்து போட்டிகளும், 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கபடி, சிலம்பம், கூடைப்பந்து இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து, மேஜைப்பந்து போட்டிகளும், 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மண்டல அளவிலான போட்டியில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கைப்பந்து போட்டிகளும், 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கபடி, சிலம்பம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேஜை பந்து ஆகிய போட்டிகளும், 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மண்டல அளவிலான போட்டியில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கைப்பந்து போட்டியும் நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், இறகுப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டம், கைப்பந்து, மனவளர்ச்சி குன்றியோருக்கான 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிக்கான 100 மீட்டர் ஓட்டம், கபடி ஆகிய போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கான கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான தனிநபர் போட்டி, குழு போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 2வது பரிசு ரூ.2 ஆயிரமும், 3வது பரிசு ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பளுதூக்குதல், கடற்கரை கைப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில் தேர்வு செய்யப்படும் குழு மாவட்ட அணிகளின் சார்பில் மாநில போட்டிகளில் கலந்து கொள்வர். பொதுப்பிரிவு மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த போட்டிகளில் அதிகளவில் பதக்கம் பெறக்கூடிய பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசின் சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். இந்த போட்டிகளில் பெறப்படும் சான்றிதழ்கள் மூலம் கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெற முடியும்.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைதளமான www.sdat.tn.gov.in மூலம் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக நேரத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், தூத்துக்குடி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.