பாட்னா: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவதில் தான் தவறு காணவில்லை என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், ”வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயல்கிறது. இதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஏனெனில், பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என ஏற்கெனவே நான் தெரிவித்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், ”வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாக மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராகவும் ராகுல் காந்தி இருப்பார்” என வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். மேலும், ராகுல் காந்தியைப் போல நாடு தழுவிய பாத யாத்திரையை வேறு யாரும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்த கமல் நாத், அவர் அதிகாரத்திற்காக அரசியல் செய்யவில்லை என குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.