Recession: தலைதூக்கும் பொருளாதார மந்தநிலை – இந்திய ஐ.டி நிறுவனங்கள் சமாளிக்குமா, சறுக்குமா?

ஐ.டி துறையின் இன்றைய ட்ரெண்டிங் வார்த்தை, ‘Recession’. எல்லோருக்கும் புரியும்படி சொல்வதென்றால் ‘பொருளாதார மந்தநிலை’. இதைக் கேட்டாலே ஒருவித கலக்கமும் அச்சமும் ஏற்படும். கொரோனா பேரழிவின் தாக்கம் சற்றே ஓய்ந்து, இந்தியப் பொருளாதாரச் சூழ்நிலை தற்போதுதான் சற்று சீரடைந்துள்ளது. பல்வேறு துறைகள் பெரும் அழிவிலிருந்து மீண்டு, தற்போதுதான் இயல்புநிலைக்கு வந்துள்ளன. அதற்குள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை (Recession) கவலை தருகிறது. முக்கியமாக தகவல் தொழில்நுட்பத் துறையைக் கவலையடைய வைத்துள்ளது. இந்த நேரத்தில் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, அந்தக் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

தற்போதைய பொருளாதார மந்தநிலை அமெரிக்காவை அதிகமாகப் பாதிப்படையச் செய்துள்ளது. ‘அதிகரிக்கும் வட்டி விகிதங்களையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லை என்றால் வேலைவாய்ப்புகள் குறையலாம். வட்டி விகிதம் அதிகரித்து, பொருளாதாரம் நலிவுற்றுப் போய்விடும்’ என்று ‘பேங்க் ஆப் அமெரிக்கா’ எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைமை இன்னும் வேதனை தரும்படி உள்ளது. உக்ரைன் போரினால் அதிகரிக்கும் எண்ணெய் விலை மற்றும் பணவீக்கம் தீவிரமானால், ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைய நேரிடும்.

கொரோனா பாதிப்பு

பொதுவாக ஐரோப்பாவின் பொருளாதாரத் தேக்க நிலை இந்திய ஐ.டி நிறுவனங்களைப் பெரிதாக பாதிக்காது. ஏனெனில், இந்திய ஐ.டி நிறுவனங்களின் பெரும்பான்மையான ஒப்பந்தங்கள் (IT Projects) அமெரிக்க நிறுவனங்களைச் சார்ந்ததுதான்.

இத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்க இந்திய ஐ.டி நிறுவனங்கள் எந்த அளவிற்குத் தயார் நிலையில் உள்ளன?

பொருளாதார மந்தநிலையின் காரணமாக, ஐ.டி நிறுவனங்கள் வருவாய் குறைபாட்டை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. Work From Home முறையை நீடிப்பு செய்யவும், Onsite opportunity எனப்படும் ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்யும் வாய்ப்பினைக் குறைக்கவும், அதிகப்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் முடிவெடுத்துள்ளன.

இந்திய நிறுவனங்களில் தங்கள் ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி பணிபுரியும் வாய்ப்பைக் கொடுப்பது வழக்கம். அதற்கு அமெரிக்கா பல வருடங்கள் பணிபுரிய H-1 B விசாவும், சில மாதங்கள் சென்று பணிபுரிய B-1 விசாவும் வழங்குவது முறை. கொரோனா காலம் முடிந்த பின், தற்போது H-1 B விசாவிற்காக அப்பாயின்ட்மென்ட் வழங்குவதற்கு சுமார் 965 நாள்களும் , B-1 விசாவிற்காக சுமார் 337 நாள்களும் ஆகின்றன. இதனால் இந்திய நிறுவனங்களில் வேலை புரியும் லட்சக்கணக்கான ஊழியர்களின் அமெரிக்கக் கனவு கானல் நீராகி விடுமோ என்று கவலை ஏற்படுகிறது.

Work From Home

சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்தானிலா ஜோர்ஜிவா, “பொருளாதார மந்தநிலை வருவதற்கான சூழ்நிலை இருக்கிறது. அதனால் உலகப் பொருளாதார வளர்ச்சி 2026-ம் ஆண்டிற்குள் நான்கு ட்ரில்லியன் டாலர் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறுகிறார்.

இந்தியாவில் இதன் தாக்கம் ஓரளவு உணரப்படுகிறது. 2021-ம் ஆண்டில் 41 இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்று Unicornகளாக உருமாறியது சிறப்பு. ஆனால், இந்த ஆண்டு வெறும் 21 இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமே பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைய முடிந்தது. இந்த எண்ணிக்கை குறைவை இந்திய நிறுவனங்கள் மிக கவனமாகப் பார்க்கின்றன. இது புதிதாக தொழில் தொடங்க ஆயத்தமாகும் பலரது கனவுகளை, வெறும் கனவாகவே மாற்றிவிடுமோ என்கிற கவலையை ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி, இந்த ஆண்டு 52 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இதுவரை 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன என Forbes இதழ் தெரிவித்துள்ளது.

சரி, இந்தப் பொருளாதார மந்தநிலையை ஐ.டி நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்க நினைக்கும்?

மேற்செலவுகளைக் குறைக்க நினைக்கும் நிறுவனங்கள் மார்க்கெட்டிங் செலவுகள், அதிகப்படியாகச் செலவழிக்கப்படும் கட்டுமான வாடகை செலவுகள், அவுட்சோர்சிங் (வேற்று நிறுவனங்களின் மூலம் செயல்படுத்துதல்) செலவுகள், வரவு செலவுகள் சரிபார்த்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றும் ஊழியர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அதிக சம்பளம் அல்லது ஊக்கத்தொகை (Bonus) போன்றவை வழங்கும் அதே நேரத்தில், சிறப்பாகச் செயல்படாத ஊழியர்களைக் களையெடுத்தல் போன்றவற்றை நிறுவனங்கள் செயல்படுத்தலாம். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளைக் கண்டறியலாம்.

இந்தப் பொருளாதார மந்தநிலை தொடர்ந்தால் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும், கல்லூரிகளில் படித்து முடித்து வேலை தேட வரும் Fresherகளும் என்ன செய்யலாம்?

ஐ.டி நிறுவனங்கள்

ஐ.டி நிறுவன ஊழியர்கள் தங்களின் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள தங்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவரவின் திறனை மேம்படுத்த துறை சார்ந்த ‘Certification’ அல்லது ‘Trainings’ போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரி படித்து வெளிவரும் மாணவர்கள் முன்கூட்டியே ஐ.டி. துறை சார்ந்த Training மற்றும் certifications எடுத்துக்கொண்டு தங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டால், ஐ.டி நிறுவனங்கள் நடத்தும் ‘Campus Placements’ இன்டர்வியூவில் சுலபமாகத் தேர்வாக நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆங்கிலப் பேச்சுத்திறனை மேம்படுத்த என்னென்ன வழிகள் உண்டோ, அவற்றைச் செய்து திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

2022-ம் ஆண்டைப் பொருத்தவரையில், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்றமும் இறக்கமும் மிகுந்த Roller coaster ride ஆகவே அமைந்துள்ளது.

இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொருத்தவரை, அமெரிக்கப் பெரு நிறுவனமான Accentureயின் ஆண்டு வருவாய் முடிவுகள் மிக முக்கியமான குறியீடாகக் கருதப்படுகிறது. Accenture-ன் செயல்பாட்டை வைத்துதான் இந்திய ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சியும் கணிக்கப்படுகிறது. Accenture நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 15.7 பில்லியன் டாலர்கள். இது சென்ற ஆண்டை விட 5 சதவிகிதம் அதிகம். இதை ஒரு பாசிட்டிவ் அம்சமாகவே கருதலாம்.

தலைசிறந்த பாடத் திட்டங்கள், தேவைக்கு அதிகமான திறன் மிகுந்த மனித வளம் (skilled work force), அதிகப்படியான சிறு குறு நிறுவனங்கள் ஆகியவை உள்ளதால், இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மையான இடத்தில் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை, இந்தியாவின் Gross Domestic Product (GDP) பங்கில் சுமார் 9% பங்களிப்பைக் கொடுத்துள்ளது.

பெரு நிறுவனங்களான Infosys கடந்த காலாண்டில் பணியாளர்களின் எண்ணிக்கை தேய்வு (Attrition Rate) 27.1 சதவிகிதமாகவும், Wipro-வின் எண்ணிக்கை தேய்வு 23 சதவிகிதமாகவும் உள்ளன. இது கடந்த காலண்டை விட குறைவானவை. கடந்த காலாண்டில் Tata Consultancy Services மற்றும் HCL Technologies நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் மிக சீராக உள்ளதாக அந்நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தெரிவிக்கின்றன. HCL நிறுவனம் 2023-ம் ஆண்டு, தங்களுடைய ஆண்டு வருமானம் 12 சதவிகிதம் உயரும் எனக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை | Recession

இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 2023-ம் ஆண்டில் வரக்கூடிய ப்ரொஜக்ட்ஸ் எண்ணிக்கை நன்றாக உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனித் திறன் (niche skills) மற்றும் அரிதான டெக்னாலஜி கொண்டு செயல்படும் ஐ.டி நிறுவனங்கள், இத்தகைய பொருளாதார மந்தநிலையிலும் முன்பை விட அதிகப்படியான ஊழியர்களை பணியமர்த்தவே செய்கின்றன. இவை எல்லாம், இந்திய ஐ.டி சந்தையின் நிறையான தன்மையை வெளிப்படுத்துகிறது.

பொருளாதார மந்தநிலை (Recession) 2023-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தை பாதித்து விடுமோ என்கிற அனைவரின் வினாவிற்கு, விடையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு ஒரு சூழ்நிலை உருவானாலும், இந்திய ஐ.டி துறை அதை வலிமையுடன் நிச்சயம் கடக்கும்.

– இ.எஸ்.ஆர். செந்தில் சுப்பிரமணியம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.