நெல்லை: தைப்பொங்கல் பண்டிகைக்காக பனை ஓலைகள் விற்பனைக்காக வரத்தொடங்கியுள்ளன. தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு தேவையான கரும்பு, மஞ்சள், மண் பானை, அடுப்புக்கட்டி, பனங்கிழங்கு உள்ளிட்டவை விற்பனைக்கு தயாராகி வருகின்றன. பனை ஓலையை வைத்து பொங்கலிடுவார்கள் என்பதால் பனை ஓலையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தைப்பொங்கல் மட்டுமின்றி தொடர்ந்து வரும் மாட்டுப்பொங்கல், சிறுவீட்டு பொங்கல் பண்டிகைகளுக்கும் பொங்கலிட பனை ஓலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பொங்கலிடுவதற்கு முக்கிய தேவையான பனை ஓலைகள் தற்போது பனை மரங்களில் இருந்து வெட்டி எடுத்து விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகின்றன. பாளை அடுத்துள்ள தருவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான பனை மரங்களில் இருந்து காய்ந்த பனை ஓலைகளை வெட்டி அகற்றி அவற்றை வாகனங்களில் ஏற்றி தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை விலையில் ஒரு பனை ஒலை ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். அடுத்து வரும் நாட்களில் நெல்லை மாநகர் மற்றும் முக்கிய பகுதிகளில் பனை ஒலைகள் விற்பனைக்கு வந்துகுவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.