குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 – அமைச்சர் பிடிஆர் செம குட் நியூஸ்!

மகளிருக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்று உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

மதுரை ஆரப்பாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கழிப்பறை, கட்டடங்களை நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர், நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலத்தில் நிதி நிலை சிறப்பாக முன்னேறியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றது, உடல் நலம் இல்லாமல் போனது மற்றும் அவரது மறைவுக்கு பின்னரான 7 – 8 ஆண்டுகளில் நிதி நிலை மிகவும் மோசம் அடைந்தது. உற்பத்தியில் 27 சதவீத கடனுக்கும், 20 சதவீத வட்டிக்கும் செலவிடப்பட்டது.

திமுக அரசு அமைந்த முதல் ஆண்டே நிதி நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் மொத்த வரவு – செலவு குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் சில குழப்பங்கள் உள்ளன. பல திட்டங்களை ஒன்றிய அரசின் திட்டம் என சொல்கின்றனர். ஆனால், ஒன்றிய அரசின் பணம் எதுவும் முழுமையாக அளிக்கப்படுவது இல்லை. திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு நிதி வராமல் நம்மால் திட்டத்தை செயல்படுத்த முடியாத சிக்கலும் உள்ளது. 2022 – 23 ஆம் நிதியாண்டில் மிக சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா அமல்படுத்திய விஷன் – 2023 என்ற திட்டம் நல்ல திட்டம். அதனை நாங்களும் பின்பற்ற விரும்புகிறோம். அதன்படி 2022 – 23 ஆம் நிதியாண்டில் உற்பத்தி 24 லட்சம் கோடி ரூபாயாகவும், 2024 – 25 ஆம் நிதியாண்டில் 30 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும்.

இதே வளர்ச்சி தொடரும் பட்சத்தில் 2025 – 26 ஆம் நிதியாண்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான தரவுதளம் அமைத்தல், பயனாளர்களின் உண்மை தன்மையை ஆராய்தல் உள்ளிட்ட பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. அதனை 2023 பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.