கோவை: மாரடைப்பால் உயிரிழந்த கோவை ராணுவ வீரரின் உடல், மேட்டுப்பாளையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை தேவி நகரைச் சேர்ந்தவர் மைக்கேல் சாமி(48). இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளார். மைக்கேல் சாமி கடந்த 1994-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது மைக்கேல்சாமி கூர்க்கா ரைபிள் ரெஜிமெண்ட் சார்பில் சிக்கிம் மாநில பங்கர் பகுதியிலுள்ள இந்தியா-சீனா ராணுவ எல்லைப் பகுதியில் 17,000 மீட்டர் உயரமுள்ள மலை உச்சியில் கடும் பனிப்பொழிவு உள்ள இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த நவம்பர் மாதம் விடுப்பில் தனது வீட்டுக்கு வந்த மைக்கேல் சாமி மீண்டும் பணிக்கு கடந்த 4 -ம் தேதி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து சிக்கிம் பகுதியில் உள்ள இந்திய-சீனா எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி பணியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மைக்கேல்சாமி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் நேற்று (டிச.30-ம் தேதி) இரவு கோவை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் அங்கிருந்து காரமடையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று (டிச.31) அவரது உடலுக்கு ராணுவ உயரதிகாரிகள், வீரர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை வடக்கு வருவாய் கோட்டாச்சியர் பூமா, வட்டாச்சியர் மாலதி, மேட்டுப்பாளையம் உட்கோட்ட டி.ஸ்.பி பாலாஜி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆர்.சி.கல்லறையில், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், உயிரிழந்த வீரர் மைக்கேல் சாமியின் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை அவரது குடும்பத்தினரிடம் ராணுவ உயரதிகாரிகள் ஒப்படைத்தனர்.