இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு: நாடு முழுவதும் நாளை முதல் அமல்

புதுடெல்லி: இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020 ஏப்ரலில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு ஒன்றிய அரசு நீட்டித்தது.

இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நீடிப்பு இன்றுடன் (டிச. 31) முடிவடைந்து, நாளை முதல் புதிய நீடிப்பு அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து ஒன்றிய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, அரிசி, கோதுமை தானியங்கள் தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். ஜனவரி 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும்.

இலவச உணவு தானிய திட்டத்தை முறையாக செயல்படுத்த 18 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலவச உணவு தானியத் திட்டம் நாளை முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 81.35 கோடி மக்கள் பயனடைவார்கள்; இதற்காக ஒன்றிய அரசு ரூ .2 லட்சம் கோடி செலவிடும்’ என்று கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.