ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி வரும் ஜனவரி 2ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதில் இருந்து ஜனவரி 11ம் தேதி இரவு 11.59 மணி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
வைகுண்ட ஏகாதசி நாளில், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ஏழுமலையானின் புகழ் பாடி அதிகாலையில், சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம்.
மேலும், வாழ்வில் இருக்கும் சங்கடங்கள் அனைத்தும் தீரும். அதுமட்டுமின்றி ஏழுமலையானின் அருளும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் பக்தர்கள் பலரும் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வர்.
பொதுவாகவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு இலவச நேரம் ஒதுக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.
திருப்பதி அலிப்பிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
டோக்கனில் குறிப்பிடப்பட்டு உள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்றும், நாளையும் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு கவுண்டர்கள் மூடப்பட்டன.
புத்தாண்டையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதல் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேவஸ்தான அதிகாரிகள் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மீண்டும் திறப்பது குறித்து, இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே தேவஸ்தான அதிகாரிகள் முறையான அறிவிப்பு வெளியிட்டு, பக்தர்கள் குழப்பத்தை போக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.