ராமநாதபுரம் மாவட்டத்தில் வனச்சரக அலுவலராக பணியாற்றிவருபவர் மோகன் என்கிற முகமது (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். கடந்த 2020-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இவர் பணியாற்றியபோது, முகநூலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து முகநூலில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு வாட்ஸ்அப்பில் பழக்கத்தை தொடர்ந்தனர். அப்போது அந்தப் பெண் மோகனிடம், “நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார். அதை நம்பிய மோகன் `திருமணம் செய்துகொள்வோம்’ எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ்அப்பில் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், `எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். எனவே உடனடியாக உங்கள் வீட்டில் பேசி பெண் பார்க்க வாருங்கள்’ என அழைத்துள்ளார் சனா. இது குறித்து மோகன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தபோது, வேற்று மத பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், பெற்றோர் எதிர்ப்பை மீறி 2020 நவம்பர் மாதம் சேலத்துக்குச் சென்று, அந்தப் பெண் வீட்டாரிடம் திருமண பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மோகன். அப்போது சனா தனக்கு கார், திருமண செலவிற்கு ரூ.2.50 லட்சம் பணம், 40 பவுன் நகை போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தன்னுடைய மதத்திற்கு மாற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சை நம்பி விலை உயர்ந்த சொகுசு கார், ரூ.2.45 லட்சம் ரொக்கம், 37 பவுன் நகையை கொடுத்ததோடு, தன்னுடைய பெயரையும் முகமது என மாற்றி, கடந்த ஆண்டு (2021) ஜனவரி 25-ம் தேதி சேலம் பள்ளிவாசலில் வைத்து திருமணம் முடித்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் மோகனிடமிருந்து அவர் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து சனாவிடம் மோகன் கேட்டுள்ளார். அப்போது, தான் தொழில் செய்ய விரும்புவதாகும்… அதற்கு பல லட்சம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து வங்கியில் ரூ.10.50 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார் மோகன். பணத்தை வாங்கியவர், மோகனிடம் சண்டையிடுவது போல் தகராறு செய்து மறுமாதமே தனது அம்மா வீட்டிற்கு செல்வதாக சேலத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் அவரை அழைத்து வருவதற்காக சேலத்திலுள்ள அவரின் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார் மோகன். அங்கு அவருடைய மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்துள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம் செல்போனில் யாருடனாவது சிரித்துப் பேசிக் கொண்டும், எஸ்.எம்.எஸ் அனுப்பியபடியும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அவரது மனைவியை கண்டித்தபோது, `இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். இதில் தலையிடக்கூடாது, எனக்கு தோணும்போது வருவேன், இப்போது கிளம்புங்கள்’ என சத்தம் போட்டாராம்.
அதையடுத்து, மோகன் அவருடைய மனைவிக்குத் தெரியாமல் அவரது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் அவர் பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதில் தன்னைப் போலவே 15-க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்துள்ளதையும், மேலும் முகநூலில் இதேபோல் 30-க்கும் மேற்பட்டோரை காதல் வலையில் சிக்கவைத்து திருமண ஆசையை தூண்டி பணம் பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்களாக இருப்பதும் தெரிந்திருக்கிறது.
இதையடுத்து, தான் ஏமாந்திருப்பதை அறிந்து சனாவிடம் தன்னிடம் வாங்கிய பணம், காரை திருப்பிக்கொடுக்குமாறும், `உன்னோடு வாழ விருப்பமில்லை’ எனவும் கூறியுள்ளார். இதற்கிடையேதான் அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இடமாறுதலாகி வந்துள்ளார். பணம் கேட்டு சேலத்திற்கும், ராமநாதபுரத்திற்கும் ஒரு வருடமாக அலைந்தும் பணம் மற்றும் கார் திரும்ப கிடைக்கவில்லை. இந்த நிலையில, மோகன் இந்த விவகாரம் தொடர்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவுசெய்த கீழக்கரை போலீஸார், சேலம் மாவட்ட போலீஸார் உதவியுடன் சனாவைப் பிடிக்கச் சென்றபோது, அவர் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.