பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாநிலத்தில் கடந்த அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்ட நிலையில், நீதிமன்ற வழக்குகளால் தள்ளிபோனது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது, பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் நிலையில், தற்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தல் அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் வாக்குகள் 20ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி 17 மாநகராட்சிகள் உட்பட 68 நகராட்சிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 மாவட்டங்களுக்கு 7,088 வாக்குச்சாவடிகளிலும், 286 நடமாடும் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 1,665 பதவிகளுக்கு 11,127 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 5,154 ஆண் வேட்பாளர்களும், 5973 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்தநிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், கயா மாநகராட்சியில் 40 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய பெண் துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார்.
கணவரை இழந்த பெண்ணான சிந்தா தேவி, கயா பகுதியில் குப்பை அள்ளி, தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளாக காய்கறி விற்று வந்த இவர் கயா மேயர் தேர்தலில் களம் கண்டார்.
துணை மேயர் பதவிக்கு இவர் போட்டியிட்ட நிலையில், இவருக்கு முன்னாள் மேயராக இருந்த மோகன் ஸ்ரீவத்சவா ஆதரவு தந்தார். சிந்தா தேவியை எதிர்த்து நிகிதா ரஜக் என்பவர் போட்டியிட்ட நிலையில், சிந்தா தேவி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 27 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற அபார வெற்றி பெற்றார். இதை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது போன்ற எளிய மனிதர்கள் கயாவில் வெற்றி பெறுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே கயா தொகுதி எம்பியாக கல் உடைக்கும் தொழிலாளியான பகவதி தேவி என்ற பெண், கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.
சந்திரபாபு நாயுடு கேவலமானவர்; ஆந்திர முதல்வர் கடும் சாடல்.!
தேர்தல் வெற்றி குறித்து பேசிய சிந்தா தேவி, அனைத்து மக்களின் ஆதரவுடன் தான் வெற்றி பெற்றதாகவும் இந்த வெற்றி மகிழ்ச்சியை தருவதாகவும் கூறினார். கயா நகரத்தின் சாலை கட்டுமானம், வடிகால், தூய்மை பணி ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தி பணியாற்றுவேன் என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், ஜனவரி மாதம் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.