புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு உலகத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி பேரிழப்பை சந்தித்துள்ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் பிரசண்டா கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் அன்பு தாயாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர்: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ரஷ்யா, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் சார்பில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இந்திய பாரம்பரியத்தை பின்பற்றி வாழ்ந்தார். அவரது வாழ்வியல் நடைமுறை, கொள்கைகளை பிரதமர் நரேந்திரமோடி கண்டிப்புடன் பின்பற்றுகிறார். பிரதமரின் தாயார் ஹீராபென்னின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
மக்களவை சபாநாயகர்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, கிரண் ரிஜுஜு, மன்சுக் மாண்டவியா, பிரகலாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பியூஷ் கோயல், ஜெய்சங்கர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மாநில முதல்வர்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குஜராத் முதல்வர் பூபேந்திரபடேல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒரு நூற்றாண்டு ஓய்வெடுக்கிறது: பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு, கடவுளின் காலடியில் ஓய்வெடுக்கிறது. நான் எப்போதும்எனது தாயின் பாதத்தில் தெய்வீகத்தை உணர்வேன். துறவியாக, சுயநலமற்ற கர்மயோகியாக, நன்னெறிகளுடன் வாழ்ந்த எனது தாய் இறைவனின் காலடியை சேர்ந்துவிட்டார்.
நூறாவது பிறந்த நாளில் நான்அவரை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு சில அறிவுரைகளைக் கூறினார். புத்திக்கூர்மையுடன் பணியாற்ற வேண்டும். ஒழுக்கம், புனிதத்தைப் போற்றி வாழ வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்’’ என்று தெரிவித்துள்ளார்.