மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் வனத்துறை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகுபலி என்ற காட்டு யானை புகுந்து பயிர்களை நாசம் செய்தது. அதன்பின், பாகுபலியுடன் மற்றொரு யானையும் இணைந்து மக்களை மிரட்டியது. வனத்துறையினரால் அவை வனத்துக்குள் விரட்டி விடப்பட்டது.
கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து மீண்டும் வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாசம்பாளையம், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினமும் பயிர்களை சேதப்படுத்திய யானை சமயபுரம் சாலையை கடந்தது. அப்போது, வனத்துறை சார்பில் யானையை விரட்டும் வாகனம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த யானை ஆக்ரோஷமாக பிளிறியபடி சென்றது.