ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே மேவானி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு ஒரு மகன்.
இதில், பூர்ணிமா எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக ஆமதாபாத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். மருத்துவர் சக்திவேல் ஈரோடு புதிய ஆசிரியர் காலனியில் தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். தற்போது, சக்திவேலின் மகனுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அவர்மதுரையில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
மேலும், சக்திவேலின் பெற்றோர் சொந்த ஊரான மேவானிக்குச் சென்றுள்ளனர். இதனால், சக்திவேல் மட்டும் வீட்டிலிருந்து வந்த நிலையில், நேற்று காலை அவர் பணிக்கு செல்லவில்லை.
இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுக்க மறுத்துள்ளார். எனவே மருத்துவமனை ஊழியர்கள் அவருடைய வீட்டிற்கு நேரடியாகச் சென்று பார்த்தனர்.
அங்கு சக்திவேல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் மயக்க மருந்து ஊசி கிடந்தது. இதைபார்த்த ஊழியர்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மருத்துவர் சக்திவேலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, மருத்துவர் சக்திவேல் தனக்குத்தானே மயக்க ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அந்த வீட்டில் சக்திவேல் தனது கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாவது, ”என்னுடைய சாவுக்கு நானே காரணம். எனக்கு மனசு சரியில்லாததால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று எழுதி இருந்தது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.