நாமக்கல்: நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதிமீறி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தில்லைகுமார் (35). பட்டாசு வியாபாரி. அருகில் உள்ள ஓடப்பாளையத்தில் பட்டாசு குடோன் வைத்துள்ளார்.
புத்தாண்டு விற்பனைக்காக நேற்று முன்தினம், சிவகாசியில் இருந்து பட்டாசுளை வாங்கி வந்துள்ளார். அவற்றை குடோனில் வைக்காமல், ஆர்டர் கொடுத்தவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக, தனது வீட்டிலேயே விதியை மீறி வைத்திருந்தார். வீட்டில் அவரும் மனைவி பிரியங்கா (30), தாய் செல்வி(55), குழந்தை சஜினி (4) ஆகியோரும் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில், வீட்டில் இருந்த பட்டா திடீரென வெடித்தது. அனைத்து பட்டாசுகளும், வானில் பறந்து வெடிக்க கூடிய ரகம் என்பதால், கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து நாலாபுறமும் சிதறியுள்ளன. அப்போது, தில்லைகுமாரின் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. இதில், அடுத்தடுத்துள்ள 11 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. தில்லைக்குமாரின் வீடும் இடிந்து நொறுங்கியது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தில்லைகுமார், 50 மீட்டர் தொலைவிற்கு தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தார்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 30 பேர், 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து, சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கும்மிருட்டாக இருந்ததால் அப்பகுதியில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. விடிய, விடிய மீட்பு பணி நடைபெற்றது. தொடர்ந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெரியக்கா(72) சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, பிரியங்காவின் உடல், காலை 7 மணி அளவில் மீட்கப்பட்டது.
சிறிது நேரத்தில் அவரது தாய் செல்வியும் சடலமாக மீட்கப்பட்டார். பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு, பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர். அருகில் உள்ள வீடுகளில் வசித்த 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களை தவிர 8 பேர் லேசான காயமடைந்தனர்.
சம்பவ இடத்தை, சேலம் சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டு விசாரித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதிர்ஷ்டவசமாக தப்பிய பெண் குழந்தை
வீட்டில் பட்டாசு வெடித்து தீப்பற்றியபோது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர், உடனடியாக உள்ளே புகுந்து தில்லைக்குமாரின் 4 வயது பெண் குழந்தை சஜினியை லேசான காயத்துடன் மீட்டுள்ளார். இதில்,அந்த வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பணத்திற்காக உயிரை விட்ட மூதாட்டி
தில்லைக்குமாரின் வீட்டில் பட்டாசு வெடித்து சிதறிய சத்தம் கேட்டதும், அக்கம்-பக்கத்தினர் அரை தூக்கத்தில் எழுந்து பதறியடித்து வெளியே ஓடி வந்து உயிர்தப்பினர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெரியக்கா என்ற மூதாட்டியையும் வெளியே அழைத்து வந்து காப்பாற்றினர். ஆனால், அவர் பீரோவில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக, சந்து வழியாக மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது, மேற்கூரை இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இதில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.