
திமுகவின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவதாகும். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ளது. இன்னும் இந்த திட்டத்தை திமுக தொடங்கவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை எல்லாம் காற்றில் எழுதப்பட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று திமுக அரசு அமைந்த முதல் ஆண்டே தமிழகத்தின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6 மாதத்துக்கு ஒரு முறை மாநிலத்தின் மொத்த வரவு, செலவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் சில குழப்பங்கள் உள்ளன. பல திட்டங்களை ஒன்றிய அரசின் திட்டம் என சொல்கின்றனர். ஆனால், ஒன்றிய அரசின் பணம் எதுவும் முழுமையாக அளிக்கப்படுவது இல்லை. திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு நிதி வராமல் நம்மால் திட்டத்தை செயல்படுத்த முடியாத சிக்கலும் உள்ளது.

தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட நிதிநிலை ஆய்வு குறித்த கூட்டம் திருப்தியாக இருந்தது. அதனடிப்படையில் 2022-23ம் நிதியாண்டில் மிக சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. 2022-23 நிதியாண்டில் உற்பத்தி ரூ.24 லட்சம் கோடியாகவும், 2024- 25 நிதியாண்டில் ரூ.30 லட்சம் கோடியாகவும் இருக்கும். இதே வளர்ச்சி தொடரும்பட்சத்தில் 2025 – 26 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது.
மகளிருக்கு ரூ. 1000 உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறினார்.