புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் சுல்தான்புரி-கஞ்சவாலா பகுதியில் நேற்று அதிகாலை 3.20 மணியளவில் டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், ‘குதுப்கர் சாலையில் காருக்குப் பின்னால் 23 வயதுடைய பெண்ணின் சடலம் தொங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கூறினார். அதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கஞ்சவாலா பகுதியில் கார் ஒன்றின் பின்னால் பெண்ணின் சிதைந்த உடல் தொங்கிகொண்டிருந்தது. சில மீட்டர் தொலைவில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் கிடந்தது.
அந்த வாகன எண்ணின் அடிப்படையில், இறந்த பெண் யார்? என்பது கண்டறியப்பட்டது. அமன் விஹார் பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணின் தந்தை காலமாகி விட்டார். அவரது தாய், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பணி நிமித்தமாக சம்பவ நாளன்று வீட்டில் இருந்து கிளம்பிய அந்தப் பெண் விபத்தில் சிக்கி இறந்ததால், அதுகுறித்து அவரது தாய்க்கு போன் செய்து தகவல் கொடுத்தோம். முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவர் பின்னால் சென்ற கார் அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது.
அப்போது காரின் பின்னால் பெண்ணின் இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டதால், சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் தரதரவென்று இழுத்து செல்லப்பட்டுள்ளார். காருக்குள் இருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு உதவி செய்யவில்லை. பின்னர் அவர்கள் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தினரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து வழக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அந்தப் பெண்ணை அவர்கள் தாக்கினார்களா? ஏதேனும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்தனரா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது’ என்றனர்.