திருவள்ளூரை அடுத்த சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் திருவள்ளூர் காக்களுர் சாலையில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி இளம்பெண்ணுக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி விஜய், ஆட்டோவில் சீயஞ்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே விஜய்யின் நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் விஜய், தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தியிருக்கிறார். போதையில் இளம்பெண்ணுடன் விஜய், தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த விஜய்யின் நண்பர்கள், அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தனர். அதற்கு அவர், சம்மதிக்காமல் அவர்களுடன் போராடியிருக்கிறார். ஆனாலும் விஜய்யின் நண்பர்கள் வலுகட்டாயமாக இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விஜய்யின் வீட்டுக்கு வந்தனர். அதனால் விஜய் உட்பட அவரின் நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அவர்கள் இளம்பெண்ணை மீட்டனர். அதோடு புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் இளம்பெண்ணிடம் என்ன நடந்தது என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர்மல்க தெரிவித்தார். மேலும் இளம்பெண் அளித்த தகவலின்படி தப்பி ஓடிய விஜய், சாம்ராஜ் ,சதீஷ் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணைக்குப்பிறகு மூன்று பேரையும் கைதுசெய்த போலீஸார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. புத்தாண்டில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான தகவல் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.