ஜெருசலேம்,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.
அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, ஹமாஸ் போன்று மேலும் பல ஆயுதமேந்திய குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுதமேந்திய குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மேற்குகரையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள ஜலாமிஹா சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேல் பாதுகாப்புபடை வீரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை வீரர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய அகமது அய்மென் அபே, அப்துல் ரஹ்மான் ஹனி அபே ஆகிய 2 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் மீது தாக்குதல் நடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட 2 பாலஸ்தீனியர்களின் வீட்டை இடிக்க ஞாயிறுக்கிழமை இரவு மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள குபர் டன் நகருக்கு இஸ்ரேல் படையினர் சென்றனர்.
அப்போது, அங்கிருந்த பாலஸ்தீனியர்கள் , இஸ்ரேல் படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து இரு தரப்பு மோதலாக மாறியது.
இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு, ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில் இஸ்ரேல் படையினரால் பாலஸ்தீனியர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முகமது சமீர் ஹொஷியா (வயது 22), பவத் முகமது அபே (வயது 25) ஆகிய 2 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இதனிடையே, சுட்டுக்கொல்லப்பட்ட பவத் முகமது அபே தங்கள் அமைப்பை சேர்ந்தவர் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோதலுக்கு பின் இஸ்ரேல் வீரரை கொன்ற பாலஸ்தீனியர்கள் அகமது அய்மென் அபே, அப்துல் ரஹ்மான் ஹனி ஆகியோரின் வீட்டை இஸ்ரேல் படையினர் இடித்தனர்.
மேற்குகரையில் இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 2 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தது 2023-ம் ஆண்டு முதல் நிகழ்வாகும்.