பார்வை குறைபாடுடைய வளரும் இசை கலைஞர் காட்சன் ரூடுல்ஃப். அவர் கிட்டத்தட்ட 30 இசைக்கருவியை வாசித்து வருகிறார். இவரது தந்தை ஒரு கட்டிட வடிவமைப்பாளர். இவர் சிறு வயதில் தனது கைப்பேசியில் இசையை இசைத்ததும் இசையின் மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த இவரது தந்தை இவருக்கு முறையாக இசை பயிற்சி அளிக்க இவருக்கான இசைபள்ளியை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அதே சமயம், இவருக்கு இசையின் மேல் உள்ள ஆர்வத்தால், தனது இசை கருவியைக்கொண்டு தானாக இசையை கற்று வந்தார்.
PT PRIME-2க்கு காட்சன் ரூடுல்ஃப் அளித்த நேர்காணலில் ”எனது 12ம் வயதில் ராஜேஷ் என்ற இசை ஆசிரியரிடம் முறையாக டிரினிட்டி கற்றுக்கொண்டேன். அனிருத் சார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையை என்னை ஊக்கப்படுத்தியது. ஒரு விஷயத்தை நாம் நம்பினால், அது நம்மை உயர்த்தும். இது என் வாழ்க்கையில் நான் உணர்ந்தது. அதே போல் எனக்கு புத்தகம் படிக்க மிகவும் பிடிக்கும். ஒவ்வரு முறையும் புத்தகம் படிக்கும் பொழுது புதியதாக ஒரு விஷயம் நமக்குக் கிடைக்கும். அப்துல் கலாம் சாரை நான் சந்திக்கவேண்டும் என நினைத்தேன், அது நடக்கவில்லை, அவரின் கோட்பாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பெற்றோர்கள் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டால் அவர்கள் நன்றாக வருவார்கள் என்பது எனது எண்ணம். எனக்கு MCC யில் கம்பியூட்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை, ஆனால் சீட் கிடைக்கவில்லை. நீங்க பார்த்து பண்ணுவதை நான் கேட்டு பண்ணுகிறேன். அவ்வளவு தான் என்னால் நிச்சயமாக படிக்கமுடியும். ஆனால் ஏன் எனக்கு சீட் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. பிறகு எங்களுக்கான பள்ளியில் முதுகலை படித்தேன். பிறகு சில அட்வான்ஸ் கோர்ஸஸ் முடித்தேன். இந்த லாக்டவுன் நாட்களில் நான் நிறைய அப்பிக்கேஷன் கையாள்வதைக் கற்றுக்கொண்டேன். முக்கியமாக யூடியூப் மூலம் எனது திறமையை வெளிக்காட்டினேன்” என்று கூறும் அவர் திரைத்துறையில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.