நாராயண்பூர்: சட்டீஸ்கரில் மத மாற்ற விவகாரத்தில் வழிபாட்டு தலத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். சட்டீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டம்,எட்கா என்னும் கிராமத்தில் நேற்றுமுன்தினம் மத மாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மதமாற்றத்தை கண்டித்து நேற்று பழங்குடியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். மாவட்ட எஸ்பி சதானந்த் குமாரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அப்போது ஒரு கும்பல் எஸ்பி சதானந்த் குமாரை தாக்கியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையே கும்பலில் இருந்த சிலர் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்பி கூறுகையில்,‘‘ கிராமத்தில் உள்ள விஸ்வ தீப்தி கிறிஸ்தவ பள்ளி அருகே போராட்டக்காரர்கள் கூடினர். அவர்கள் அங்கிருந்து தேவாலயத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கூறினேன். அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் திடீரென கம்பால் என் தலையில் தாக்கினர். பின்னர், போலீசார் கூட்டத்தினரை கலைத்து நிலைமையை கட்டுப்படுத்தினர்’’ என்றார்.